வடக்கு சொல்வதென்ன?

வடக்கு சொல்வதென்ன?

Published on

‘..அரசாங்கம் வென்டால் முற்றத்தில இருக்கிற சிங்களக் குடியேற்றம் நடு வீட்டுக்குள்ளயும் வந்திடும்..” - நம்முடைய கேள்விக்கு, வன்னி மண்ணின் வயதுபோன ஒருவர் அளித்த பதில் இது. இதுவே இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் முடிவைத் தெளிவாக விளக்குகிறது.

இப்போது உலகம் எதிர்பார்த்த ஜனநாயக பாணிக்கு, ஈழ மக்கள் திரும்பியிருக்கின்றனர். அதற்காக, ராஜபக்சேக்களுடன் அவர்கள் நான்கு ஆண்டுகள் கடும்போர் புரியவேண்டியிருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் சாரத்தையும், தியாகங்களையும் இறுக்கிப்பிடித்தபடி, ஆயுதமற்ற இன்னுமொரு போருக்கு களமிறங்கி உள்ளனர். கூட்டமைப்பின் தடுமாற்றங்களையும் மீறி இன்னொரு அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களும் சலுகைகளும் வாக்குறுதிகளும், தமிழ் ஈழத் தேர்தல் அரசியலில் எடுபடுவது மிக அரிது. மக்கள் நேசிக்கும் தேசிய அலையை ஒட்டிச் செயல்படுவார்கள் என்று யாரை நினைக்கிறார்களோ, அவரையே தம் தலைவராக்கி அழகுபார்க்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என ஈழத்தில் அடுத்தடுத்து வந்த, தேர்தல் அரசியல் கட்சிகளை ஏற்றுக்கொண்டதிலும் நிராகரித்ததிலும், இந்தக் கொள்கையே முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிறது. இதையொட்டியே, விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான தலைமையாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஈழத்தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

வளர்ச்சி என்பதை முதன்மைப்படுத்தியே ராஜபக்சேவின் தரப்பு  வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது. இதன் பெயரால், பௌத்தமயமாக்கல், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், கலாச்சார சிதைப்பு போன்றவற்றைத் துணிந்து செய்தார்கள், அவர்கள். புலித் தோல்வியோடு, தமிழர்கள், சிங்களவர்களால் அடிமைப்படுத்தப்பட்ட இனம் என்ற கற்பிதத்தை, வலிந்து உருவாக்கிக் கொண்டார்கள். இதை, களத்தில் நின்று செய்தவர்கள், சிங்கள அமைச்சர்களோ, அதிகாரிகளோ அல்ல. ஹத்துருசிங்க (வட இலங்கை மாகாண ஆளுநர் மற்றும் படைகளின் தளபதி) என்ற ஒரே ஒரு சிங்களவரைத் தவிர, மற்றைய அனைவரும் தமிழர்கள். மறுபக்கம் ராஜபக்சேவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், கீதாஞ்சலி மற்றும் கே.பி. இவர்களே கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் ஏதுமற்றவர்களாக ஆக்குவதற்காக, திட்டமிடப்பட்ட தேர்தலில் அரசு சார்பாக செயல்பட்டார்கள். ஆனால் மக்களோ, ராஜபக்சேவின் மீதிருந்த ஒட்டுமொத்த கோபத்தையும், வாக்கு கேட்டுவந்த இவர்களிடம் காட்டியிருக்கின்றனர். இதனால் இருந்ததையும் இழந்திருக்கிறார் டக்ளஸ்.

ஆளுந்தரப்பு வேட்பாளர்களும், இராணுவமும், புலனாய்வாளர்களும் செய்த அட்டூழியங்களும்; கூட்டமைப்பினரை வெல்ல வைத்தது என்றே சொல்லவேண்டும் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே, தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்பை மிரட்டினர். வேட்பாளர்களின் வீடுகளையும், வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். வாக்களிப்பு நாளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள் வாக்களிப்பு நிலைய வாசல்களில் நின்று மக்களை மிரட்டினர். இத்துடன் முள்ளிவாய்க்கால் கோபமும் அரசியல் தெரிவில் பிரதிபலித்தது. 

தேர்தலுக்கு முதல்வாரம்கூட, ராஜபக்சேவின் வெற்றிக்கு இந்தியா உதவி செய்ய முயன்றது. இந்தியா அமைத்துத்தரும் வடக்கிற்கான ரயில் பாதையை, ராஜபக்சே திறந்துவைத்தார். அப்போது, ‘வடக்கு(மாகாணம்), வசந்தத்தை நோக்கித் திரும்பியிருக்கின்றது’ என்றார். மக்களோ  தம் வாக்குகளின் ஊடாக பதிலை அறிவித்து இருக்கின்றனர். அதாவது, தம் நிலத்தை, அரசியல் அபிலாஷையை, சுயநிர்ணயத்தை, தேசியத்தை, பண்பாட்டை இழந்து பெறப்படும் அபிவிருத்தி வேண்டாம் என்பதை உலகிற்குச் சொல்லியிருக்கின்றனர்.

வடக்கில் படைகளைக் குறைத்தல், சுயாதீன அரசொன்றை வடக்கில் நிறுவுதல், காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்தல், சர்வதேச விசாரணைக்குக் கொண்டு செல்லுதல், இலங்கை அரச படைகள் இடித்தழித்த மாவீரர் துயிலும் இல்லங்களை மீள் நிர்மாணித்தல் என பல கோரிக்கைகளை முன்வைத்தே, தேர்தல் களத்தில் நின்றது, கூட்டமைப்பு. இவையனைத்தும் இலங்கையில் நடக்க அரசு அனுமதிக்காது என மக்களுக்கு தெளிவாகத் தெரியும். அத்துடன் கூட்டமைப்பிடமிருந்து, அவர்கள் பெற்ற கடந்த கால அனுபவங்களும், முதன்மை வேட்பாளரான விக்கினேஸ்வரன் தொடர்பான சந்தேகங்களும் இந்த நம்பிக்கையிழப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனாலும், சர்வதேசம் மீதான நம்பிக்கையும், தந்தை செல்வா காலத்து ‘வீடு’ சின்னத்தை இழக்கக் கூடாது என்பதும், சிங்கள ஆக்கிரமிப்பை தற்காலிகமாகவாவது தவிர்க்க வழியொன்று கிடைக்கும் என்ற அவாவினாலும், கூட்டமைப்பைத் தவிர வேறு தெரிவு இல்லாததாலுமே ஈழத் தமிழ் மக்களின் தெரிவு இப்படியாக அமைந்திருக்கிறது! தேர்தல் முடிவு பற்றி ஈழத்தமிழர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டோம்:

கேஷாயினி- பொறியியல் மாணவி, வன்னி: வடக்கு மக்கள் ஆயரில்லா மந்தைகள்... படித்த புத்திஜீவிகளும் புலம்பெயர்ந்துவிட்டார்கள்... தொழில்பிரச்னை, காணிப்பிரச்னை, காணாமல் போதல்கள். வேறு வழியில்லை. மஹிந்தவைத் தோற்கடிக்கணும் என்பது மட்டுமே முதன்மை.

மயூரப்பிரியன்- ஊடகவியலாளர்: வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தாலும் இலங்கையரசு அதற்கு அனுமதிக்காது. விக்கினேஸ்வரனுக்கு  இந்த அரசியல் சாணக்கியங்கள் பெரியளவில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கவிமாறன்- சுவிசர்லாந்து: மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம், மாவீரர்களுக்காக வாழ்வோம் என்று கூறுவது எல்லாம் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகள். இத்தகைய மாவீரர்கள் மீதான நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை எவர் என்றாலும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

புவிதாஸ்- ஊடக வளங்கள் பயிற்சி மையம், யாழ்ப்பாணம்:

சரியோ பிழையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டிய தேவைதமிழ் மக்களுக்கு உண்டு.ஆனாலும் கூட்டமைப்பை விமர்சிக்க முடியாத சூழ்நிலை தற்போது உள்ளது. ஒரு மாற்றுத் தெரிவு தமிழர்களுக்கு இல்லாமையே அதற்கான காரணம். 

---

உரிமை மீட்புக்காகவே! - குருகுலராஜா

கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றிபெற்ற இவர், வட பகுதியெங்கும் ‘இக்கட்டான’ காலகட்டத்தில் கல்வி அதிகாரியாக இருந்து, பணியாற்றியவர். வெற்றிச்செய்தி வந்தவுடனேயே, மாகாணசபை கல்வி அமைச்சுப் பதவி இவருக்குதான் என்றனர், சகல தரப்பிலும்.

மக்களின் எதிர்பார்ப்புகள்?

சிங்களவர் பறித்துக்கொண்ட பொருளாதாரத்தை மீளப் பெற்றுக்கொள்வதே, மக்களின் உடனடித் தேவையாக இருக்கின்றது. உரிமை, சுயநிர்ணய மீட்டெடுப்புக்காகவே எம்மைத் தெரிவுசெய்துள்ளனர். அதற்கான பணிகளை திறம்படச்செய்வோம்.

வடக்கு..இப்போது எப்படி?

ஓரளவு அமைதி திரும்பியிருக்கின்றது. தேர்தலுக்கு முன்பு இருந்த தம் நிலைகளுக்கு படையினர் வந்திருக்கின்றனர்.

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com